மானிய டீசல் விலையில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்



 
மானிய டீசல் விலையில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைப்படகு மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் விசைப்படகுகளுக்கு அரசின் மூலம் மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் விசைப்படகு ஒன்றிற்கு 18 ஆயிரம் லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மாநில அபெக்ஸ் மீன்பிடி கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (டாப்கோ பெட்) சார்பில் ஒரு டீசல் பங்கும், தமிழ்நாடு மீனவர் மேம்பாட்டு கழகம் (டி.என்.டி.எப்.சி) சார்பில் ஒரு டீசல் பங்கும் இயங்கி வருகிறது. இந்த இரண்டு டீசல் பங்குகளிலும் தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை மூலம் அனுமதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மானிய விலையில் டீசலை பெற்று வருகின்றனர்.

வேலை நிறுத்தம்

இந்தநிலையில் டாப்கோபெட் சார்பில் நடத்தப்படும் டீசல் பங்கில் ஒரு லிட்டர் டீசல் ரூ.82.88 ஆகவும், டி.என்.டி.எப்.சி. மூலம் நடத்தப்படும் டீசல் பங்கில் ஒரு லிட்டர் டீசல் ரூ.75.57 ஆகவும் உள்ளது. ஒரேஊரில் உள்ள இரண்டு வேறு டீசல் பங்குகளில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான டீசல் விலை முரண்பாடாக உள்ளதாலும், பல மீனவர்கள் அதிக விலை கொடுத்து ஒரு பங்கில் டீசல் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தினர் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் டீசல் விலையில் உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் விலையில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரியும், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments