ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்குக - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு




ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நியாய விலை கடைகளுக்கு இன்று அளிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்களை ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.

பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை. இதன்காரணமாக அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.


இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்க அனைத்து நியாயவிலைக் விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நியாயவிலைக்‌ கடைகள்‌ வாயிலாகக்‌ குடும்ப அட்டைதாரர்களுக்குப்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ வழங்கும்போது கைவிரல்‌ ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது. ஆதார்‌ இணையத்‌ தரவுத்‌ தளம்‌ வேலை செய்யவில்லை என்றும்‌,இதனால்‌ விரல்‌ ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும்‌ இதனால்‌ சில பகுதிகளில்‌ நியாயவிலைக்‌ கடைகளில்‌ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ வழங்கப்படாமல்‌ குடும்ப அட்டைதாரர்கள்‌ திருப்பிவிடப்படும்‌ நேர்வுகள்‌ கவனத்திற்குக்‌ கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 22.02.2022 முதல்‌ விரல்ரேகை சரிபார்க்கும்‌ நடைமுறையில்‌ இடையூறுகள்‌ நமது மாநிலத்தில்‌ மட்டுமன்றிப்‌ பரவலாக இதர மாநிலங்களிலும்‌ நிகழ்ந்துள்ளன. இவை தொடர்புடைய நிறுவனங்களின்‌ (இந்தியத்‌ தனித்துவ அடையாள ஆணையத்தின்‌) - (Unique Identification Authority of India - UIDAI) உயர்‌ அலுவலர்களின்‌ கவனத்திற்கு உடனுக்குடன்‌ கொண்டு செல்லப்பட்டுச்‌ சரி செய்யப்‌ போர்க்கால நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே பரவலாக இணைய இணைப்பு / தொழில்நுட்பத்‌ தடைகளால்‌ கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில்‌ உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன்‌ தவறாது இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட வேண்டும்‌ எனவும்‌ அனைவருக்குமான பொதுவிநியோகத்திட்டத்தின்‌ கீழ்‌ தகுதியுள்ள அனைத்துக்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ தரமாக விநியோகம்‌ செய்யப்பட்டு உணவுப்‌ பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டுமெனவும்‌ நியாயவிலைக்‌ கடைப்பணியாளர்கள்‌ உட்பட அனைத்து அலுவலர்களுக்கும்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன.

மேலும்‌ 26.02.2022 அன்றைய நியாயவிலைக்‌ கடைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுக்‌ கடைகள்‌ இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அட்டைதாரர்கள்‌ அவர்களது குடும்ப அட்டைக்கான இன்றியமையாப்‌ பண்டங்களை நியாயவிலைக்‌ கடைகளிலிருந்து எந்தவித சிரமமுமின்றிப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments