கீரமங்கலத்தில் திருட வந்த ஓட்டலில் பணம் குறைவாக இருந்ததால் தீ வைத்து சென்ற மர்ம நபர் பொருட்கள் எரிந்து நாசம்

கீரமங்கலத்தில் திருட வந்த ஓட்டலில் பணம் குறைவாக இருந்ததால் மர்ம நபர் பொருட்களுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஓட்டலில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது

ஓட்டல் பொருட்கள் எரிந்தது
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அதன்மேல்மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் ஓட்டலில் இருந்து கண்ணாடிகள் உடைந்து கொட்டுவது போல சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கீழே வந்து ஓட்டலை திறந்து பார்த்த போது ஓட்டலில் இருந்த மர மேஜை, பிளாஸ்டிக் நாற்காலிகள், பீரோ மற்றும் பொருட்கள் எரிந்து புகை மூட்டமாக இருந்துள்ளது. 

உடனே தண்ணீரை ஊற்றி அணைப்பதற்குள் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஆவணங்களும் எரிந்து நாசமாகி இருந்தது. கண்ணாடிகள், மேற்கூரை, பல்புகள், மின்விசிறிகளும் எரிந்து நாசமாகிவிட்டது.
பணம், சைக்கிள் திருட்டு
அதன் பிறகு பார்த்த போது ஓட்டலின் மேஜையில் இருந்த பணம் மற்றும் ஆதரவற்றோர்களுக்காக சேமித்து வைத்திருந்த உண்டியல் போன்றவற்றை காணவில்லை. பணம் குறைவாக இருந்ததால் அந்த விரக்தியில் மர்மநபர் கடைக்கு தீ வைத்திருக்கலாமா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காணாமல் போன உண்டியல் சுமார் 100 மீட்டருக்கு அந்த பக்கம் ஒரு தென்னந்தோப்பில் உடைக்கப்பட்டு கிடந்ததை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கைப்பற்றினார்.
மேலும் அருகில் உள்ள ராஜா என்பவரின் காய்கறிக் கடையில் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த  ரூ.2 ஆயிரத்தையும் அருகில் கிடந்த சைக்கிளையும் திருடி சென்றுள்ளனர். இதே கடையில் கடந்த 18-ந் தேதி ஒரு சைக்கிள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருகில் உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரமங்கலம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments