இந்தியாவில் மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி






மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்திற்கு பின்பு, இரண்டு ஆண்டுகள் கழித்து மார்ச் 27-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், அனைத்து விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. எட்டு மாதங்கள் வரையில் நீடித்த இந்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்தது, அதன் பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

எனினும், கரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை "வந்தே பாரத்" திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 2021-ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையைத் தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து, இந்திய அரசு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் இந்தியா அழைத்து வருகிறது.

தற்போது கரோனா தொற்றின் மூன்று அலைகளின் பாதிப்பும் குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா "மார்ச் 27-ம் தேதியிலிருந்து இந்தியாவில் சர்வதேச விமான சேவைத் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பாதிப்பு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மார்ச் 27-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவையைத் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதன் பின்னர் ஏர் பபுல் ஏற்பாடுகள் ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை மூலம் இந்தத் துறை புதிய உச்சங்களைத் தொடும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விமானப் போக்குவரத்து துறை அதிகாரபூர்வ அறிக்கையில், "உலகம் முழுவதும் பரவலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து மார்ச் 27 ம் தேதி முதல் சர்வதேச விமான சேவைத் தொடங்கப்படவுள்ளது. அப்போது இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வெளியிடும் வழிகாட்டுதல்கள் உறுதியாக கடைபிடிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments