விராலிமலை அருகே பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம்

விராலிமலை தாலுகா, வடுகப்பட்டி ஊராட்சியில் கடந்த 2006-ம் ஆண்டு சமத்துவபுரம் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இதுவரை சமத்துவபுரத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து அங்கு குடியிருப்போர் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பட்டா வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சமத்துவபுரத்தை சேர்ந்த குடியிருப்புவாசிகள் தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கக்கோரியும், மின் இணைப்பை தங்களது பெயருக்கு மாற்றித்தரக்கோரியும், சமத்துவபுரத்தில் மராமத்து பணிகள் செய்து தரக்கோரியும் நேற்று காலை சமத்துவபுரத்திற்கு செல்லும் நுழைவுவாயிலில் துணியால் பந்தல் அமைத்து 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரவிச்சந்திரன் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். அதனைத்தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சேதமடைந்த அங்கன்வாடி, மைதானம் மற்றும் வீடுகளின் சேதத்தின் தன்மையை கணக்கெடுத்து அதற்கான மராமத்து பணிகளை செய்வதாகவும், பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments