‘நான் முதல்வன்’ தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டையில் 186 பள்ளிகளில் ஒளிபரப்பானது. இதனை 41 ஆயிரம் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமில்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினையையும் வெளியிட்டார்.
மேலும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடநூலை வெளியிட்டு, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி காணொலி காட்சியாக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

186 பள்ளிகளில் ஒளிபரப்பு

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 186 பள்ளிகளில் இந்தநிகழ்ச்சி நேரலையாக பிரமாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்டன. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம், அரசு ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 40 ஆயிரத்து 885 மாணவ- மாணவிகள் இந்தநிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

முன்னதாக கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments