நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செலவின கணக்கை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் அதிகாரிகள் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, மார்ச்.14-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செலவின கணக்கை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தோ்தல்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர்களுக்கும், அரிமளம், அன்னவாசல், ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, பொன்னமராவதி, இலுப்பூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர்களுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2-ந் தேதி பதவியேற்றனர். தொடர்ந்து தலைவர், துணை தலைவர் கடந்த 4-ந் தேதி பதவியேற்றனர்.

செலவின கணக்கு

இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். சிலர் இன்னும் தாக்கல் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டை நகராட்சியை பொறுத்தவரை 282 பேர் போட்டியிட்டதில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மட்டும் தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தேர்தலின் போது வேட்பாளர்களின் செலவுகளுக்கு குறிப்பிட்ட தொகையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்தலின் போது வாகன பிரசாரம், ஆட்டோ பிரசாரம், துண்டுபிரசுரம் வழங்குதல், பிரசாரத்தில் உடன் இருந்தவர்களுக்கான செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் கணக்கிடப்படும். தேர்தல் செலவின கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தப்படும். அதன்பின் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவோம். குறிப்பிட்ட நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments