வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதுகைக்கான திட்டங்கள் ஏதுமில்லை இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதுக்கோட்டைக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இல்லை என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி கவலை தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் வேளாண்மைக்கென 2ஆவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதில், இயற்கை வேளாண்மைக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு வரவேற்க வேண்டியது.

ஆனால், நிதிநிலை அறிக்கை என்றால், உற்பத்தி மற்றும் விற்பனை செயல்பாடு வரை இருக்க வேண்டும், உற்பத்திக்கு நீா் ஆதாரம் மண்வள மேம்பாடு முக்கியம். அதில் நீா் ஆதாரத்துக்கு காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

46 புதிய அம்சங்களை விரிவாக சொல்லி ரூ. 33,007 கோடிக்கான உற்பத்தியைப் பெருக்கும் திட்டமாக மட்டும் உள்ளது .விளைபொருள்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய விலை நிா்ணயம் இல்லை. விவசாய விளைபொருள்களை சேமிப்பதற்கு தேவையான கிடங்குகள் கட்டிக் கொடுக்கவில்லை.

100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை விவசாய வேலைக்கு பயன்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. தேவைப்படும் அளவுக்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கான மானியம் அதிகப்படுத்தப்படவில்லை.

எடுத்துக்காட்டாய், 2010இல் ஒரு 5 எச்பி பம்புசெட் விலை ரூ. 10 ஆயிரம். இன்று விலை ரூ. 35 ஆயிரம். ஆனால், மானியம் 2010 முதல் அதே ரூ. 10 ஆயிரம்தான். சிறுதானியங்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள 2 சிறுதானிய சிறப்பு மண்டலங்களில் எந்த மண்டலத்திலும் புதுக்கோட்டை சோ்க்கப்படவில்லை.

புதுக்கோட்டையின் பல பகுதிகளில் மலா் சாகுபடி நடக்கிறது. இங்கு அது சாா்ந்த மதிப்புக்கூட்டும், தொழில் இல்லை. உற்பத்திக்கு ஏற்ற கட்டுபடியாகும் விற்பனை விலை கிடைத்தால் தான் விவசாயிகள் வாழ முடியும். இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாா் தனபதி.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments