மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்கள் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும்? கல்வித்துறை சுற்றறிக்கை





மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்கள் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளி வாகனத்தில் உதவியாளர்

சென்னையில் 2-ம் வகுப்பு மாணவர் பள்ளி வாகனம் மோதி பலியான சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வாகனங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பள்ளி வாகனங்கள் (பஸ், வேன்) முறையாக பராமரித்து ஆண்டுதோறும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிசோதனைக்குட்படுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காத வாகனங்களை இயக்கக்கூடாது.

டிரைவர்கள் நியமனம் செய்யப்படும்போது, உரிய கல்வித்தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று டிரைவர் உரிமம் வைத்துள்ள நபர்களை நியமிக்க வேண்டும்.

பள்ளி வாகனத்தில் மாணவர்களை இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும்போது வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்கவேண்டும். அவர் மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் இருந்து பள்ளி வளாகத்துக்குள் அனுப்ப வேண்டும். மேலும் மாணவர்கள் பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கியபின் பஸ்சின் அருகாமையில் நான்கு புறமும் மாணவர்கள் யாருமில்லை என்பதை உறுதிசெய்து கொண்டு மீண்டும் வாகனத்தை இயக்க வேண்டும்.

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து திரும்ப அழைத்து சென்றுவிட பயன்படுத்தப்படும் பள்ளி பஸ்கள், வேன்கள், ஆட்டோக்களில் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை பள்ளி தாளாளர், முதல்வர் உறுதி செய்ய வேண்டும். அவற்றில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

சினிமா பாடல்கள் போடக்கூடாது

வாகனத்தை ஓட்டும்போது சினிமா பாடல்கள் போடக்கூடாது. எக்காரணத்தை கொண்டும் வண்டியில் அதிகமாக மாணவர்களை ஏற்றக்கூடாது. எந்தவொரு மாணவரும் 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் பயணம் செய்ய தேவைப்படாத வகையில் வாகனங்களின் பயணத் தடங்கள் அட்டவணையிடப்பட வேண்டும்.

டிரைவரின் குழந்தை, குழந்தைகள், குடும்ப புகைப்படம் ஒன்றை டிரைவரின் இருக்கை எதிரில் பார்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும்.

பள்ளி வாகனங்கள் பள்ளியின் பெயரிலேயே இருக்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை டிரைவர் திறனை பள்ளி அளவில் அனுமதிக்கப்பட்ட பஸ் குழு முன் நிரூபித்து காட்டவேண்டும். மேலும் அந்த நேரத்தில் கண் பார்வை பரிசோதனையும் செய்திருக்கவேண்டும்.

பணியில் இருக்கும்போது டிரைவர் சீரூடையில் இருக்கவேண்டும். அவருடைய சீருடையில் இடதுபுற பாக்கெட்டில் அவருடைய பெயர், பேட்ஜ் எண், மாவட்டத்தின் பெயர் குறிப்பிட்டு வெள்ளை நிற பிளாஸ்டிக் அட்டை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

சாலை விதிகளை மதித்து கவனத்துடன் டிரைவர் வாகனத்தை ஓட்டவேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments