புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் முன்னெடுப்புகள்: அரசுப் பள்ளி மாணவிகள் பாராட்டுக் கடிதம்






புதுக்கோட்டை: பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து புதுக்கோட்டை ஆட்சியரால் தயாரித்து வெளியிடப்பட்ட குறும்படமானது, அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக அரசுப் பள்ளி மாணவிகள் எழுதிய கடிதமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் முயற்சியாக "அரண்" எனும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், முன்மாதிரி முயற்சியாக, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு, சட்ட உதவி, மனநலம், பாலியல் நலக்கல்வி, உடல் நலம், பாலின சமத்துவம், அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு தனித்தனியே குறும்படம் தயாரிக்கப்பட்டது. படத்துக்கான காட்சிகள், விழிப்புணர்வு வாசகம், எடிட்டிங், தலைப்பு ஆகியவற்றை ஆட்சியரின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,967 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 21 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை உறுமொழி ஏற்கச் செய்யப்பட்டது. அதோடு, அங்குள்ள வசதிகளுக்கு ஏற்ப குறும்படங்கள் திரையிடப்பட்டன. பாலியல் குற்றத்தை தடுக்கவும், ஆலோசனை பெறவும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கான 18004252411 கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 9443314417 எனும் வாட்ஸ்அப் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்களும், மாணவ-மாணவிகளின் உறுதிமொழி ஏற்றதும் தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வே.அகிலாண்டேஸ்வரி, செ.சுபிக்ஷா உள்ளிட்ட மாணவிகள் ஆட்சிருக்கு அண்மையில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.




அந்தக் கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் ஆட்சியர் கவிதா ராமு பதிவிட்டுள்ளார். அதில், “மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை பள்ளியிலுள்ள ஹைட்டெக் ஆய்வகத்தில் பார்த்தோம். தற்போதுள்ள சூழலில் இந்த குறும்படமானது எங்களுக்கு அச்சத்தை போக்குவதோடு, பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அனைத்து பெண் குழந்தைகளின் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதமானது, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முன்மாதிரி முயற்சியை பாராட்டும் விதமாக உள்ளதாக ஆட்சியர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments