மீமிசல் அருகே முத்துக்குடாவை சுற்றுலா தலமாக மாற்ற 15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான மீமிசல் அருகே முத்துக்குடாவை சுற்றுலா தலமாக மாற்ற 15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கடற்கரை பகுதிகளை கொண்டதாகும். இதில் மீமிசல் அருகே முத்துக்குடா பகுதி அமைந்துள்ளது. தீவு போல் காணப்படும் இதனை சுற்றுலா தலமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலில் படகில் சிறிது தூரம் சென்று ரசிக்கும் வகையில் காணப்படும் இதில் அலையாத்தி காடுகள் உள்ளன. 

படகு மூலம் அலையாத்தி காடுகளை சுற்றி பார்க்கவும், கடற்கரை பகுதியில் சுற்றுலா தலத்திற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி படகு குழாம் அமைத்தல், தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும், இந்த பகுதியை கலெக்டர் கவிதாராமு மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

இந்த நிலையில் முத்துக்குடா பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் அரசின் நிலம் 15 ஏக்கர் பரப்பளவு சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘முத்துக்குடாவை சுற்றுலா தலமாக மாற்ற தற்போது நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இனி அடுத்தகட்டமாக மத்திய, மாநில அரசுகளின் நிதி மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்’’ என்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் சார்ந்த இடங்கள், குடைவரை கோவில்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலம் எதுவும் குறிப்பிடும்படி இல்லை. முத்துக்குடாவை சுற்றுலா தலமாக மாற்றினால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments