கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தடை காலம் இன்று முதல் தொடங்கியது.

மீன்பிடி தடைகாலம் தொடங்கியது

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகினை கரையில் ஏற்றி அதில் உள்ள பழுதுகளை சரி செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள்.

விலை அதிகரிப்பு

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் விசைப்படகு துறைமுகத்தை ஒட்டி எண்ணற்ற சிறு, சிறு வியாபாரிகள் உள்ளனர். தடைகாலம் ஆரம்பித்ததால் அவர்களுக்கு வியாபாரம் குறைய தொடங்கி விடும். முன்னதாக நேற்று கடைசி நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பினர். அப்போது மீன்களை வாங்க வெளியூரிலிருந்து எண்ணற்ற வியாபாரிகள் விசைப்படகு துறைமுகத்தில் குவிந்தனர்.

61 நாட்களுக்கு மீன்கள் கிடைக்காது என்பதால் மீன்களின் விலை இருமடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். மீன்பிடி தடைகாலம் விசைப்படகுகளுக்கு மட்டும்தான் பொருந்தும். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல எவ்வித தடையும் இல்லை. ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் எக்காரணம் கொண்டும் இழுவலை, தள்ளு வலை போன்றவை பயன்படுத்தி இறால் மற்றும் மீன் பிடிக்க கூடாது. படுவலை மற்றும் தூண்டில் மூலமாக மட்டும் தான் மீன் பிடிக்க வேண்டும்.

அசைவ பிரியர்கள் கவலை

மீன்பிடி தடை காலம் குறித்து அசைவ பிரியர்கள் கூறுகையில், கடற்கரை பகுதிக்கு அருகே வசிப்பதால் காலம் காலமாக மீன்களை விரும்பி சாப்பிட்டு வருகிறோம்.

இந்தநிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்து விட்டதால், விலை உயர்ந்த மீன்கள் கிடைப்பது மிகவும் அரிது என கவலையுடன் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments