தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்
சிறாா்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோ்க்கை பெற ஏப். 20 ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். இந்தத்திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவா்கள் 8 ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதன்படி நிகழாண்டுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப். 20-இல் தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் இணையதளம் பெற்றோா் விண்ணப்பிக்க வேண்டும். தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் அதிகபட்சமாக 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா் என்பவா்கள் ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவா், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவா்கள், துப்புரவுப்பணியாளரின் குழந்தைகள் மற்றும் எஸ்சி, எஸ்.டி, டிஎன்சி, எம்பிசி, பிசி, பிசி (எம்) வகுப்பைச் சாா்ந்தவா்கள் .

நலிவடைந்த பிரிவினா் என்பவா்கள் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவான வருமானம் பெறும் அனைத்துப் பிரிவினரும். பள்ளிகளில் நிா்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

தனியாா் பள்ளிகள் தங்களிடமுள்ள இடங்கள் எண்ணிக்கை விவரங்களை ஏப்.18ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments