புதுக்கோட்டை-திருச்சி, ராமேசுவரம் மார்க்க ரெயில்களில் ‘சீசன் டிக்கெட்’ விற்பனை அதிகரிப்பு




கொரோனா பரவல் குறைந்த நிலையில் ரெயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக ரெயில் சேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட ரெயில்கள் தற்போது வழக்கமான ரெயில்களாக இயக்கப்படுகிறது. மேலும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. டெமு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்திலும் ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதால் ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாணவ-மாணவிகள்
மதுரை கோட்ட ரெயில்வேயில் முக்கியமான பழமையான ரெயில் நிலையமாக புதுக்கோட்டை காணப்படுகிறது. புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம், திருச்சி, சென்னை உள்பட வட மாநிலங்களுக்கு ரெயில் சேவை உள்ளது. பக்கத்து மாவட்டங்களுக்கு ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணி நிமித்தமாகவும், வேலைக்கு செல்வோர்களும் திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு பயணிப்பது உண்டு.

இதில் முன்பு பயணிகள் ‘சீசன் டிக்கெட்’ எடுத்து வழக்கமாக பயணம் செய்து வந்தனர். இடையில் ரெயில்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பயணிகள் பஸ் போக்குவரத்தை பயன்படுத்தினர். தற்போது இயல்புநிலைக்கு திரும்பியதால் ‘சீசன் டிக்கெட்’ எடுத்து பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.

‘சீசன் டிக்கெட்’ விற்பனை அதிகரிப்பு
ரெயில்களில் ‘சீசன் டிக்கெட்’ என்பது முன்பதிவில்லா டிக்கெட்டில் குறிப்பிட்ட ஊர்களுக்கு 1 மாதம், 3 மாதம், 6 மாதம், 1 வருடம் என கணக்கிடப்பட்டு அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெறுவது உண்டு. இதற்கு பிரத்யேகமாக ரெயில் நிலைய கவுண்ட்டரில் விண்ணப்பித்து டிக்கெட் பெற வேண்டும். பயணிகள் தங்களது வசதிக்கேற்ப மாதத்தை கணக்கிட்டு டிக்கெட் பெறலாம். தற்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, ராமேசுவரம் மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில்களில் இந்த ‘சீசன் டிக்கெட்’ எடுத்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் 100 டிக்கெட் வரை விற்பனையாகி உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். காலை மற்றும் மாலை வேளைகளில் ரெயில்களில் சென்று வர இந்த ‘சீசன் டிக்கெட்’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் வரிசையில் நின்று கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டிய அவசியமில்லை. ரெயிலில் பயணிக்கும் டிக்கெட் பரிசோதகர் சோதனைக்கு வரும் போது இந்த சீசன் டிக்கெட்டை காண்பித்தால் போதும். பயணிகள் மத்தியில் ‘சீசன் டிக்கெட்’ மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments