திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் பிரிவில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா?




திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் பிரிவு சாலையில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

புதுக்கோட்டையை அடுத்த திருமயத்தில் கோட்டை மற்றும் பிரசித்தி பெற்ற சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து மதுரை மாா்க்கமாக செல்லும் பஸ்கள் திருமயத்தை கடந்து தான் செல்ல வேண்டும். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமயம் ஊருக்கு சாலை தனியாக பிரிந்து செல்கிறது.இந்த பிரிவு சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதில் பிரிவு சாலையை குறிக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு மார்க்கமாக இந்த பிரிவு சாலையை கடந்து செல்லும் போது வேகமாக தான் கடந்து செல்கிறது.

இரும்பு தடுப்புகள்

அதே நேரத்தில் புதுக்கோட்டையில் இருந்து திருமயம் நோக்கி செல்லும் வாகனங்கள், இந்த பிரிவு சாலையை கடக்கும் போது மெதுவாக கவனமாக செல்ல வேண்டும். ஒரே நேரத்தில் இந்த சாலையில் வாகனங்கள் வரும் போது விபத்து ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. ஒரு சில நேரத்தில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.

இந்த விபத்தினை தடுக்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் அந்த பிரிவு சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விபத்தினை தடுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments