வங்கியில் நகையை அடகு வைத்து பெற்ற பணம்: மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு விவசாயி போலீசில் புகார்




வங்கியில் நகையை அடகு வைத்து பெற்றிருந்த ரூ.1½ லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த போது திருட்டுபோனது. இதுகுறித்து விவசாயி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ரூ.1½ லட்சம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் பணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52) விவசாயி. இவர் பரம்பூரில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியில் இருந்து சொந்த தேவைக்காக நகையை அடகு வைத்தும், தனது வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை எடுத்துள்ளார். பின்னர் எடுத்த பணத்தை ஒரு பையில் போட்டு வங்கிக்கு அருகில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் தொங்க விட்டு உள்ளார். இந்நிலையில், பின்பக்கம் திரும்பி தான் அணிந்திருந்த கைலியை அவிழ்த்து கட்டியுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டிருந்த பணப்பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது அதில், மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்து செல்வது பதிவாகியிருந்தது.

பரபரப்பு

வங்கியில் பணம் எடுப்பதை நோட்டமிட்ட அந்த 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி சென்றிருக்கலாம் என சந்ேதகிக்கப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்த தேவைக்காக விவசாயி நகையை அடகு வைத்து எடுத்து சென்ற பணத்தை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments