குறைந்த விலைக்கு தங்க கட்டி தருவதாக கூறி புதுக்கோட்டை செல்போன் கடைக்காரரிடம் ரூ.10 லட்சம் மோசடி ஒருவர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு





புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவருடைய மகன் அபுபக்கர் சித்திக் (வயது 32). இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்காக நகை வாங்க முடிவு செய்துள்ளார்.அப்போது தனது நண்பரான ஜெராக்ஸ் கடை உரிமையாளர் அண்ணாதுரை மூலம் மதுரை மாவட்டம் கே.புதூர் ராமலட்சுமண நகரை சேர்ந்த நல்லகண்ணு என்பவரது மகன் அரவிந்த் என்ற மனோஜ் என்ற சக்திவேல் (49) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் தன்னிடம் 200 கிராம் தங்கக்கட்டி உள்ளது. அதனை குறைந்த விலைக்கு தருவதாகவும், சேலத்தில் உள்ள தனது வீட்டில் வந்து வாங்கி கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய அபுபக்கர் சித்திக் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது அண்ணன் அப்துல் நாசருடன், சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொய்மான் கரடு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அரவிந்தின் வீடு இங்கு தான் உள்ளது, வாருங்கள் செல்லலாம் எனக்கூறி மோட்டார் சைக்கிளில் அபுபக்கர்சித்திக்கையும், அப்துல் நாசரையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். 

அந்த மர்ம நபர் நாழிக்கல்பட்டி ஏரிக்கரை பகுதிக்கு அவர்களை கூட்டி சென்று அங்குள்ள ஒரு வீட்டை காட்டி இதுதான் அரவிந்த் வீடு என்று கூறியுள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் வந்த 3 பேர் தங்களை சுங்க அதிகாரிகள்(கஸ்டம்ஸ் ஆபிசர்) என்றும், நீங்கள் இருவரும் தங்க கடத்தலில் ஈடுபட்டு உள்ளீர்கள், அதனால் உங்களை கைது செய்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

 அப்போது அபுபக்கர் சித்திக்கை மோட்டார் சைக்கிளில் கூட்டி வந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அபுபக்கர் சித்திக், அப்துல் நாசர் இருவரையும் காரில் அழைத்துச் சென்ற மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த ரூ.10 லட்சத்தை பிடுங்கி கொண்டு சிறிது தூரத்திலேயே அவர்களை இறக்கி விட்டு சென்றுள்ளனர். நடந்த சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த அண்ணன்-தம்பி இருவரும் மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments