இந்துக்களும் இப்தார் நோன்பும் - தொண்டியில் இதயங்களை இணைத்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி

இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சியை இந்து மக்கள் சார்பாக நடத்தப்பட்டு ஒற்றுமையுடன் கொண்டாடியது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
இந்துக்களும் இப்தார் நோன்பும் - தொண்டியில் இதயங்களை இணைத்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனை யொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பிறை தமிழ்நாட்டில் தென்படாத நிலையில், ஏப்ரல் 3 ஆம்  முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிறை தெரிந்தது முதல் 30 நாட்களுக்கு நோன்பு நோற்று அதன் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 30 நாட்களும் அதிகாலை 4.15 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பிருந்து மாலையில், தொழுகையை முடித்து கொண்டு உணவை எடுத்துக் கொடுத்துக் கொள்வர்கள். நேற்று  25 ஆம் நாள் நோன்பு கடை பிடிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம் என்றாலே ஏதோ பகையாளிகள் போல சில ஊடகங்கள் உட்பட, சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பொய்யாகப் பரப்புரை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது தமிழகத்தில் சிறு பிரச்சினை என்றால் கூட அதற்கு மதச்சாயம் பூசி  மதம் பிடித்தவர்கள் சித்தரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆனால்,  தொண்டியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை  என்றால் இதுதான் என நெற்றிப் பொட்டில்  அடித்தார் போல், இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் அருகருகே ஒன்றாக அமர்ந்து, இந்து தர்ம பரிபாலன சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்  இப்தார் நோன்பு திறந்திருக்கிறார்கள்.

கிராமப்புறங்களில் ஒருவரை கொஞ்சமும் தொடர்பில்லாத விசயத்தில் அவரை தொடர்பு படுத்தி பேசினால், எனக்கு அதில்  கொஞ்சங்கூட சம்பந்தமில்லை என்பதை, சிலேடையாக  'அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம்' என்று இப்பவும் சொல்வதுண்டு.  ஆனால் இங்கு இப்தார் நோன்புக்கும்  இந்துக்களுக்கும் தொடர்பு உண்டு என்று நிரூபித்துள்ளனர், தொண்டி இந்து தர்ம பரிபாலன சங்கத்தினர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொண்டியில் இந்து தர்ம பரிபாலன சபை சார்பில் இதயங்களை இணைக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அப்பகுதி அனைத்து சமூக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் தொண்டி அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. தற்போது இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தில்  முஸ்லிம்களின் நோன்பு காலம் என்பதால் மாலை நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இதில்,   இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர் உள்ளிட்ட  அனைத்து மதத்தை சார்ந்த  மக்களும் கலந்துகொள்ள ஏதுவாக தொண்டி இந்து தரும பரிபாலன சபை இன்று ஏற்பாடுகள் செய்திருந்தது. இதில், நோன்பு கஞ்சி,மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பண்டங்களை உண்டு  நோன்பை திறந்துள்ளனர்.

நிகழ்வில் இஸ்லாமிய மக்களுடன் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சியை இந்து மக்கள் சார்பாக நடத்தப்பட்டு  ஒற்றுமையுடன் கொண்டாடியது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்றாக அமர்ந்து இப்தார் நோன்பு திறந்து ஒற்றுமையை காட்டியதைப் போல, அந்தந்த மதத்தின்   வழிபாட்டு உரிமையில் யாரும் அடுத்தவர் மனங்களை காயப்படுத்தாமல் கடந்து சென்றால், இந்தியாவில் நாள்தோறும் பண்டிகைதான்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments