அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க கோரிக்கை - எஸ்.டி. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ
குழந்தைகள் இல்லாத ஏழைக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'செயற்கை கருத்தரிப்பு மையங்கள்' ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறந்தாங்கி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின் விவாதத்தின்போது, அறந்தாங்கி எஸ்.டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ, குழந்தைகள் இல்லாத ஏழைக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். மேலும், பெண்களுக்கு இலவசமாக "புற்று நோய் தடுப்பூசி"-ஐ செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மருத்துவத்துறையில் தமிழ்நாடு முதலிடம்: "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவ-மாணவியர்களின் வேலை பெறும் திறனை உயர்த்திட ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக விளங்கும் நமது முதலமைச்சரைப் போல, மருத்துவத் துறையும் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்குகிறது.

பரிந்துரையில்லா மருந்துகள் உபயோகத்தைத் தடுக்க வேண்டும்: ஆன்டி பயாடிக் மருந்துகள் முறையற்ற வகையில் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இது மருத்துவத்துறை அடுத்தடுத்து சந்திக்க உள்ள மிகப்பெரிய சவால்களில் ஆன்டிபயோடிக் மருந்துகள் பிரச்னை ஒன்றாகத் திகழும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது, குழந்தைகளுக்கு வரும் சாதாரண சளி, ஜுரம் மற்றும் வைரஸ் நோய்களுக்குக்கூட ஆன்டி பயோட்டிக் மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அதுபோல், சில மருந்து கடைகளில் எந்த மருத்துவரின் பரிந்துரையும் இல்லாமல் பலவிதமான ஆன்டி பயாடிக் மருந்துகள் கிடைக்கின்றன. இதனைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவசமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்குக: புற்றுநோய் பாதிப்பில் இருந்து பெண்களைக் காக்கும் முயற்சியாக "கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி"-ஐ அனைத்துப் பெண்களுக்கும் இலவசமாக செலுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை இறப்புகளில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. அதில் ஆண்கள் மற்றும் திருநங்கைகள் அதிகமாக இருப்பது என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ரூ.40 கோடியில் தற்கொலைகளைத் தடுக்கும் பணி: இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், கீழ்ப்பாக்கத்தில் மனநல மருத்துவமனையை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் நின்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட முதற்கட்டமாக ரூ.40 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்பது பாராட்டுக்குரியது. இத்திட்டத்திற்கு கூடுதலாக நிதியை ஒதுக்கி, இத்திட்டத்தை விரிவாக்கி தற்கொலைகள் தொடராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்: புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அறந்தாங்கி மருத்துவமனையில் மனநல மருத்துவ மையம் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடெங்கும் குழந்தை இல்லாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பலன்பெறும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் "செயற்கை கருத்தரிப்பு மையங்கள்" ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்றவைகளை உள்ளடக்கிய தனிப் பிரிவு கட்டடம் ஏற்படுத்த வேண்டும். 

ஆவுடையார்கோயில் தாலுகா மீமிசலில் தற்போது இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின்கீழ் அவசரகால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.

புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்: அறந்தாங்கி நகரில் உள்ள தஞ்சாவூர் சத்திரத்திற்கு சொந்தமான சந்தை நடைபெறும் இடத்தில், பாதி இடத்தில் சந்தையினைத் தொடர்ந்து செயல்படவும், மீதமுள்ள இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் ஒன்றைக் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அறந்தாங்கியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி ஒன்றினை ஏற்படுத்தி தரவேண்டும். அத்துடன் அறந்தாங்கி தொகுதியில் கடற்கரைப்பகுதியில் மீன் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்குகளும், சிறிய படகுகள் நிறுத்தும் வண்ணம் சிறு துறைமுகங்கள் அமைத்துத் தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments