பொதுத்தேர்வு மையத்திற்குள் செல்போனுக்கு தடை பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் பேச்சுபொதுத்தேர்வு மையத்திற்குள் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் பொன்னையா தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளுக்கான ஆய்வு அலுவலர்கள் மற்றும் அனைத்து நிலைய தேர்வு பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வு கூட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா தலைமை தாங்கி பேசியதாவது:-

தேர்வு அறையில் 20 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தினை போதிக்கும் ஆசிரியர்களாக இருக்க கூடாது. தேர்வு நடைபெறும் நாட்களை உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்து உரிய பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். விடைத்தாள்கள், வினாத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இரும்பு அலமாரிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அடிப்படை வசதிகள்

தேர்வறைகளில் இருக்கை வசதி, மின்வசதி மற்றும் தேர்வு அறையின் சுத்தம் போன்றவை சரியாக உள்ளதையும், குடி தண்ணீர் வசதி மற்றும் கழிவறைகள் வசதி ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும். தேர்வறைகளின் சுவர், கரும்பலகை மற்றும் இருக்கைகளில் எவ்விதமான பாட சம்பந்தப்பட்ட விவரங்களும் இல்லாதபடி சுத்தம் செய்யப்பட வேண்டும். காலை 8.30 மணிக்கு மேல் தேர்வு மையமாக செயல்படும் பள்ளியை சேர்ந்த எந்த ஒரு பணியாளரும் (பள்ளியின் தாளாளர்/ தலைமையாசிரியர்/ ஆசிரியர்கள்/ பணியாளர்கள் உள்பட) தேர்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருக்க கூடாது.

எக்காரணங்களை கொண்டும் அதே பள்ளியின் பணியாளர்களை அலுவலக பணிக்கு உட்படுத்தக் கூடாது. மேலும் காலை 8.30 மணிக்கு மேல் தேர்வு மைய இணைப்பு பள்ளிகளின் பணியாளர்களும் ஆசிரியர்களும் கூட தேர்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருத்தல் கூடாது. விடைத்தாள்கள் உரிய வழித்தட அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் வரை யாரையும் தேர்வு மைய வளாகத்திற்குள் வர அனுமதிக்க கூடாது.

செல்போனுக்கு தடை

தேர்வு மைய வளாகம் செல்போன்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாகும். அதனால் செல்போனுக்கு அனுமதி கிடையாது. எனவே பள்ளித் தேர்வர்கள், தனித்தேர்வர்கள் யாரும் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தேர்வினை நேர்மையாக நடத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்களுக்கு கொடுக்கும் பணியை மனச்சாட்சிக்கு உட்பட்டு சரியாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வு அலுவலரின் பொறுப்புகள், வினாத்தாள் கட்டுக்காப்பாளரின் கடமைகள், வழித்தட அலுவலரின் பொறுப்புகள் குறித்து பேசினார். கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடக்கூடியவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments