வடகாடு பகுதியில் விற்பனைக்கு குவியும் பலாப்பழங்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்லும் வியாபாரிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு மற்றும் மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் மிகுந்த சுவையுடன் இருக்கும் என்பதால் இப்பகுதிகளில் உள்ள கமிஷன் கடை மற்றும் பலா வியாபாரிகள் மூலமாக உள்ளூர் மட்டுமின்றி திருச்சி, மதுரை, கும்பகோணம், திருவாரூர், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் மும்பை, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் குவைத், சவூதி, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயல் காரணமாக அனைத்து பலா மரங்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து, பலா மரங்கள் மீண்டும் துளிர்த்து வளரத்தொடங்கின. கடந்த 3 ஆண்டுகளாக இந்த மரங்களில் பலாப்பழங்கள் காய்க்கத்தொடங்கின. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பலாப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்த ஆண்டு தான் பலாப்பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வடகாடு பகுதியில் பலாப்பழங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.


விலை சரிவு

இந்தநிலையில் பண்ருட்டி மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் பலாப்பழங்கள் அதிகளவில் வரத்தொடங்கி இருப்பதால் விற்பனை விலை சற்று சரிந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். வடகாடு மற்றும் மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் விளையும் பலாப்பழங்களை விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல் சிறிய பலா ரூ.50 முதல் ரூ.100 வரையும், பெரிய பலாவை ரூ.250 முதல் ரூ.300 வரை வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கி செல்கின்றனர்.

எனவே விவசாயிகளின் நலன் கருதி இப்பகுதிகளில் குளிர் பதன கிட்டங்கி மற்றும் மதிப்பு கூட்டுதல் முறைகளை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments