மண்டபம் அருகே விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் நாகம்மாள். இவரது கணவர் ஆறுச்சாமி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

அவருக்கு திதி கொடுப்பதற்காக நாகம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் ராமேசுவரத்துக்கு புறப்பட்டு வந்தனர். காரை காரமடையை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் ஓட்டி வந்தார்.

நாகம்மாளுடன் அவரது அக்காள் விஜயலட்சுமி, மகன் சந்தோஷ்குமார், மகள் மோகனபிரியா ஆகியோரும் வந்தனர். அவர்களது கார் இன்று காலை 6 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மரக்காயர்பட்டினம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கார் ரோட்டோரம் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 64) என்பவரின் மீது மோதியது. இதையடுத்து கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

கார் மோதியதில் நடைபயிற்சி சென்ற கிருஷ்ணமூர்த்தி, மோட்டார் சைக்கிளில் வந்த மண்டபம் யாதவர் தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரன் (45), முனீஸ்வரன் (41), ஜெகதீஸ்வரன் (19) ஆகிய 4 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.இதில் உமாமகேஸ்வரன், முனீஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திேலயே பலியாகினர்.

கிருஷ்ணமூர்த்தி படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். காருக்குள் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து காரில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தப்படி இருந்தனர்.இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த மண்டபம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த கிருஷ்ணமூர்த்தி, காரில் இருந்த நாகம்மாள், விஜயலட்சுமி, சந்தோஷ்குமார், மோகனபிரியா, டிரைவர் சம்பத்குமார் ஆகியோரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

விபத்தில் பலியான 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.விபத்து தொடர்பாக மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:

பலியான கிருஷ்ணமூர்த்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தினமும் காலையில் மண்டபம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வார். அதேபோல் இன்றும் நடைபயிற்சி சென்றபோது கார் மோதி பலியாகி விட்டார்.

இரு சக்கர வாகனத்தில் வந்தபோது கார் மோதியதில் பலியான உமாமகேஸ்வரனும், ஜெகதீஸ்வரனும் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு வேலைக்கு சென்ற அவர்கள், இன்றுகாலை வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டனர்.

அவர்கள் தனது ஊரை சேர்ந்த முனீஸ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது தான் கார் மோதி 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். விபத்தில் பலியான 4 பேரும் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள்.

அவர்கள் பலியான தகவலை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு திரண்டு நின்று கதறி அழுதபடி இருந்தனர். இதனால் அந்த பகுதியே சோகமயமாக காட்சி அளித்தது.

ராமேசுவரம் கோவிலுக்கு சென்ற கார் மோதி பாம்பன் பாலத்தில் நேற்று ஒருவர் இறந்த நிலையில், இன்று மண்டபத்தில் நடந்த விபத்தில் கார்மோதி 4 பேர் பலியாகி விட்டனர். நேற்றும் இன்றும் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments