அன்னவாசலில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அன்னவாசலில் அடுத்தடுத்த 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமையா (வயது 58). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பொன்னமராவதியில் உள்ள உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை ராமையாவின் மகன் மதியழகன் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 3 அறையில் இருந்த பீரோ, அலமாரிகளை உடைத்து அதில் இருந்த பொருட்களை கீழேகொட்டி பீரோவில் வைத்திருந்த 1 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதேபோல் கோல்டன் நகர் நல்லமாள் சத்திரம் சாலையில் உள்ள சாகுல் அமீது (49) என்பவரது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அங்கு அறையில் இருந்த 3 பீரோல்களை உடைத்துள்ளனர். தங்க நகைகள் எதுவும் கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த 5 ஆயிரத்தை மட்டும் திருடி, பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து 2 வீடுகளிலும் தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் ஆள் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் வீடுபுகுந்து திருடி விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments