செயலி மூலம் கடன் பெற்றவர்கள் பற்றி அவதூறு புதுக்கோட்டை சைபர் கிரைமில் 23 புகார்கள் வரப்பெற்றன


செயலி மூலம் கடன்பெற்றவர்கள் பற்றி அவதூறு பரப்பியதாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் 23 புகார்கள் வரப்பெற்றுள்ளன.

செயலி மூலம் கடன்

செல்போன் செயலியில் குறிப்பிட்ட தொகை கடன் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி மோசடியில் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது. அதாவது அந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தால் ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கு குறிப்பிட்ட தொகையை வட்டியாக எடுத்த பின் மீதமுள்ள தொகையை கொடுக்கின்றனர். இந்த தொகையை குறிப்பிட்ட நாட்களுக்கு திருப்பி செலுத்தாவிட்டால் வட்டி விதிக்கப்படும்.

இதற்கிடையில் கடன் பெற்றவர்களின் செல்போனில் உள்ள விவரங்களை மர்ம நபர்கள் திருடி வைத்துவிடுகின்றனர். கடன் வாங்கியவரின் செல்போன் எண்ணில் உள்ள செல்போன் எண்களுக்கு அவரை பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் தகவல்களை பரப்புகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் செல்போன் செயலி மூலம் கடன் வாங்காதீர்கள் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

23 புகார்கள்

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் செல்போன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் பற்றி அவதூறு பரப்பியதாகவும், தங்களது செல்போன்களில் இருந்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், பணத்தை இழந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இதுவரை 23 புகார்கள் வரப்பெற்றுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘‘செயலியில் கடன் பெற்றவர்கள் பணத்தை இழப்பதோடு, அவர்களை பற்றி தவறாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்புவதால் பெரும் மனவேதனை அடைகின்றனர். இதுபோன்ற செயலியை தடை செய்ய கோரி கடிதம் அனுப்பி உள்ளோம். பொதுமக்கள் யாரும் செயலி மூலம் கடன் பெற வேண்டாம்’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments