புதுக்கோட்டை மாவட்டத்தில் 21-ந் தேதி குரூப்-2 தேர்வை 22 ஆயிரத்து 618 பேர் எழுத உள்ளனர் கலெக்டர் கவிதாராமு தகவல்





புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி-2 மற்றும் தொகுதி 2 ஏ) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு வருகிற 21-ந் தேதி முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை கோட்டத்தில் 52 மையங்களில் 15 ஆயிரத்து 717 தேர்வர்களும், அறந்தாங்கி கோட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 231 தேர்வர்களும், இலுப்பூர் கோட்டத்தில் 7 தேர்வு மையங்களில் ஆயிரத்து 670 தேர்வர்களும் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 618 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.


தேர்வு மையங்களிலும் சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், மின்வசதி, புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் பஸ் நிலையத்திலிருந்து தேர்வுக் கூடங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பறக்கும்படை

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் 11 பறக்கும்படை குழுக்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 20 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் செல்போன், கால்குலேட்டர், மின்னணு கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும், தேர்வு எழுதுவோர் தேர்வு நாளன்று முககவசம் அணிந்து வரவேண்டுமென்றும், மேலும் தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்குள் தேர்வாளர்கள் அனைவரும் தேர்வு கூடத்திற்கு வரவேண்டும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments