புதுக்கோட்டை அருகே புதையல் இருப்பதாக கூறி தம்பதியிடம் பணம் மோசடி திருச்சியை சேர்ந்த 3 பேர் கைது
புதுக்கோட்டை அருகே புதையல் இருப்பதாகக்கூறி தம்பதியிடம் பணம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

உடல் நலம் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மண்டையூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 58). இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். அதில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மற்றொரு மகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் சரவணனின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று உங்கள் வீட்டில் தோஷம் ஏதேனும் இருக்கும். அதை நிவர்த்தி செய்வதற்கு துவரங்குறிச்சியில் பூசாரி உள்ளார் என்று கூறியுள்ளார்.

அதை நம்பிய தம்பதி திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சென்று அங்கிருந்த பூசாரி மணி (48) என்பவரை அணுகி தங்கள் வீட்டு பிரச்சினைகளை கூறியுள்ளனர். அதற்கு அவர் நான் உங்கள் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

புதையல்

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி துவரங்குறிச்சியை சேர்ந்த பூசாரிகளான மணி, முருகேசன் (50), மருங்காபுரி அருகே உள்ள மருதுபட்டி ராசு (50) ஆகிய 3 பேரும் மண்டையூரில் உள்ள முத்துலட்சுமி வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு சுற்றி பார்த்து விட்டு உங்கள் வீட்டிற்குள் அம்மன் சிலை மற்றும் பாம்பு சிலை ஆகியவை புதையலாக உள்ளது. அதனால் தான் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையூறு கொடுத்து வருகிறது.

இந்த சிலைகள் ஐம்பொன் அல்லது தங்க சிலைகளாகவும் இருக்கும். அதை எடுத்தால் நீங்கள் கோடீஸ்வரர்களாகி விடுவீர்கள். அந்த புதையலை எடுத்து கொடுப்பதற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறி முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு 15-வது நாளில் வந்து புதையல் எடுத்து தருகிறோம் என்று கூறிவிட்டு 3 பேரும் சென்றுவிட்டனர்.

ஐம்பொன் சிலைகள்

அதேபோல் 15 நாள் கழித்து மண்டையூருக்கு வந்த ராசு, மணி, முருகேசன் ஆகியோர் முத்துலட்சுமி வீட்டின் ஒரு அறையில் மண்வெட்டி, கடப்பாரை கொண்டு தோண்டியுள்ளனர். அப்போது முத்துலட்சுமி மற்றும் சரவணனின் கவனத்தை திசை திருப்பி 3 பேரும் தாங்கள் கொண்டு வந்திருந்த ½ அடி துவாரபாலகர் பித்தளை சிலை, 8 சென்டி மீட்டர் அளவுள்ள பித்தளை அம்மன் சிலை, 14 சென்டி மீட்டர் நீளமுள்ள பித்தளை பாம்பு சிலை, 6 பித்தளை அம்மன் காசுகள் ஆகியவற்றை வீட்டிற்குள் தோண்டிய குழிக்குள் இருந்து எடுத்ததாக கூறி இதோ உங்கள் வீட்டிற்குள் இருந்து ஐம்பொன் சிலைகளை எடுத்து விட்டோம் என்று கூறி எடுத்துக் கொடுத்துள்ளனர்.

இனிமேல் உங்கள் வீட்டில் நல்லதே நடக்கும். நீங்கள் கோடீஸ்வரராக போகிறீர்கள். இந்த ஐம்பொன் சிலைகளை வீட்டின் உள்ளே நெல்மணிகளுக்குள் வைத்து 15 நாள் தினமும் காலை, மாலை பூஜை செய்து வந்தால் ஐம்பொன் சிலைகள் தங்க சிலைகளாக மாறிவிடும் என்று கூறிவிட்டு ரூ.30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

பித்தளை சிலைகள்

இதை உண்மை என்று நம்பிய அவர்கள் தினமும் பூஜை செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிலைகளை எடுத்து சென்று நகை செய்யும் ஆசாரியிடம் கொடுத்து காண்பித்துள்ளனர். அதற்கு அவர் இந்த சிலைகள் அனைத்தும் பித்தளை சிலைகள். நீங்கள் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் குறி சொல்லும் பூசாரிகளான மணி, முருகேசன் மற்றும் ராசு ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் மதியம் மண்டையூருக்கு வரவழைத்தனர். அங்கு தயாராக இருந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து மண்டையூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

சிறையில் அடைப்பு

விசாரணையில் முத்துலட்சுமி, சரவணன் தம்பதியினரிடம் 3 பேரும் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றியதையும், இதுபோல் பல ஊர்களுக்கு சென்று மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராசு, மணி, முருகேசன் ஆகிய 3 பேரையும் மண்டையூர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments