பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பஸ்கள் வழித்தடத்தை குறைக்க கூடாது அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண பஸ்களின் வழித்தடத்தை குறைக்காமல் இயக்கிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

மாநகர் போக்குவரத்து கழக கிளைகளின் செயல்பாடுகள் குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம், முதுநிலை துணை மேலாளர், பொது மேலாளர்கள், அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

டிரைவர், கண்டக்டர்களுக்கு ‘பேட்டா’...

இந்த கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

சாதாரண கட்டண பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் ஆரம்பத்தில் 40 சதவீதமாக இருந்த பெண் பயணிகள் எண்ணிக்கை தற்போது 61 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல்-அமைச்சர் தொடங்கிவைத்த இந்த திட்டத்தை நல்லமுறையில் செயல்படுத்திட வேண்டும். எனவே சாதாரண கட்டண பஸ்களின் வழித்தடத்தை குறைக்காமல் இயக்க வேண்டும். சாதாரண கட்டண பஸ்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு ‘பேட்டா’ வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்படும். முதல்கட்டமாக கே.கே.நகர் பணிமனையில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும். அதன்பின்னர் வருங்காலங்களில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments