அறந்தாங்கி அருகே சாக்கடையாக மாறிவரும் வைரிவயல் கண்மாய் நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமமக்கள் போராட்டம்

அறந்தாங்கி அருகே வைரிவயல் கண்மாய் சாக்கடையாக மாறிவருவதால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைரிவயல் கண்மாய்

அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் உள்ள கண்மாய் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. மழைக்காலங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் அருகன்குளம், வண்ணாங்குளம் ஆகிய குளங்களில் இருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண்மாய்க்கு வந்தடையும்.

இந்தநிலையில் நகர் பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டப்பட்டு உள்ளதால் அங்கிருந்து வரும் தண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாகவும், இதனால் பராமரித்து வரப்பட்ட வைரிவயல் கண்மாயில் தற்போது வெங்காய தாமரை படர்ந்து சாக்கடை கண்மாயாக மாறிவிட்டது என கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கண்மாய் முற்றுகை

மேலும் விவசாய காலங்களில் கண்மாயில் இருந்து வரும் தண்ணீரில் நோய் பரவும் கிருமி இருப்பதால் வயல்களில் இறங்கி வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு அரிப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாய பணிக்கு யாரும் வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் வைரிவயல் கண்மாயை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சொர்ணராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில், சமாதானம் அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments