அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் பட்டுக்கோட்டை பஸ் நிலையம் 

அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கட்டிட உறுதித்தன்மை மோசமாக இருப்பதால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

பட்டுக்கோட்டை பஸ் நிலையம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை நகரம் தேர்வுநிலை நகராட்சி ஆகும். தாலுகா தலைநகராகவும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களை உள்ளடக்கிய கோட்ட தலைநகராகவும் பட்டுக்கோட்டை நகரம் உள்ளது. இந்த நகரில் கடந்த 1986-ம் ஆண்டு பஸ் நிலையம் கட்டப்பட்டது.

இங்கிருந்து தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, மதுக்கூர், பாப்பநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

காட்சி பொருளான குடிநீர் தொட்டிகள்

இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் பகல் நேரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இப்படிப்பட்ட பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும். பயணிகளின் தாகத்தை தணிப்பதற்காக பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. அதில் தண்ணீர் நிரப்புவது கிடையாது. முறையாக பராமரிப்பு இல்லாமலும் உள்ளது.

இதனால் தாகம் எடுத்தால் விலைக்கு தான் தண்ணீர் பாட்டில்களை வாங்க வேண்டிய நிலையில் பயணிகள் உள்ளனர். பஸ் நிலைய வளாகத்திற்குள் வடிகால் வசதி செய்யப்பட்டு இருந்தாலும் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கியே நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியை பயணிகள் கடந்து செல்லும்போது துணியால் மூக்கை மூடிக் கொண்டு தான் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. பஸ்சிற்காக காத்து நிற்கக்கூடிய இடம் வரை துர்நாற்றம் வீசுகிறது.

இருக்கை வசதிகள்

மேலும் பயணிகள் அமருவதற்கு போதுமான இருக்கைகளும் இல்லை. போடப்பட்டுள்ள இருக்கைகளில் சில உடைந்து காணப்படுகிறது. இதனால் தரைகளில் அமரக்கூடிய நிலை உள்ளது. எனவே பயணிகளின் தேவைக்கு ஏற்ப இருக்கை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கைக்குழந்தைகளுடன் வரக்கூடிய தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் பசியை போக்குவதற்கு பாதுகாப்பான இடவசதி வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் பாலூட்டும் அறை இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த அறை எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் கைக்குழந்தைகள் அழுதால் கூட பசியாற்றுவதற்கு பாதுகாப்பான இடவசதி இல்லாமல் தாய்மார்கள் மிகவும் தவித்து வருகின்றனர். மேலும் பொருட்கள் பாதுகாப்பு அறையும் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொருட்களை பாதுகாப்பாக வைக்க இடவசதி இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். மேலும் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ஆங்காங்கே டி.வி. வைக்கப்பட்டுள்ளது. இதுவும் காட்சி பொருளாகவே உள்ளது. இவைகளை விட மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது பஸ் நிலையத்தில் காணப்படும் கட்டிடங்கள் தான்.

எதிர்பார்ப்பு

ஓட்டல்கள், பழக்கடைகள், டீக்கடைகள் என ஏராளமான கடைகள் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் உள்ள கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் பயணிகள் வந்து செல்லக்கூடிய பகுதிகளிலும் கட்டிடங்கள் மிகவும் மோசமாக தான் காணப்படுகிறது. கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்த பகுதியில் தற்காலிகமாக சிமெண்டை பூசி உள்ளனர்.

மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இந்த பஸ் நிலையத்தின் கட்டிடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments