கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் : கறம்பக்குடி விவசாயிகள் கோரிக்கை





கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கறம்பக்குடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கறம்பக்குடி: மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு உள்ள நிலையில் கல்லணையில் இருந்து விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். கல்லணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தில் தொடங்கி தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம், இடையாத்தி, ஈச்சன்விடுதி வழியாக சென்று பின்னர் அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு, நாகுடி வழியாக மணமேல்குடி தாலுகா மும்பாலை என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. உழவயல் கிளை வாய்க்கால் மூலம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பெரும்பாலான வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சில கிராமங்களில் பாசன குளங்களுக்கு செல்லும் கால்வாய்களை விவசாயிகள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பராமரித்து வைத்து உள்ளனர். கடந்த ஆண்டு காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் சென்றபோதும் கடைமடை பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் செல்லவில்லை. இதனால் பெரும்பாலான பாசன குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே இந்த ஆண்டு கடைமடை பகுதியில் அனைத்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதையும், பாசன குளங்கள் நிரம்புவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments