கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் -‌ முத்துக்குடாவில் நடந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!!






கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என முத்துக்குடாவில் நடந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினம்(ஜனவரி 26), தொழிலாளர் தினம்(மே 1), சுதந்திர தினம்(ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தியின் பிறந்தநாள் (அக்டோபர் 2) ஆகிய நாட்களில் மட்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏப்ரல் 22ல் சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி கூடுதலாக 2 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆகியவற்றோடு கூடுதலாக உலக தண்ணீர் தினம்(மார்ச் 22), உள்ளாட்சிகள் தினம்(நவம்பர் 1) ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தொழிலாளர் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டம் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி MSc,.BEd., தலைமையிலும், ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் மேற்பார்வையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் பெ.ரமேஷ் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. 






இதில் ஊராட்சி 2021 - 2022 ஆம் ஆண்டு வரவு செலவு வாசிக்கப்பட்டும், ப்ளக்ஸ் போர்டு மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.  மேலும்  நூறு நாள் வேலைத் திட்டம், சுகாதாரம், ஊட்டச்சத்து, வறுமை ஒழிப்பு திட்டம், வேளாண்மை நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

ஊராட்சி 2021 - 2022 ஆம் ஆண்டு வரவு செலவுகளை ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா வாசித்தார்.

கூட்டத்தில் மீன்வளத்துறை, வேளாண்மைத்துறை அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி, ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும், கடற்கரையில் இருந்து ஊத்து செல்லும் சாலையில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும், குண்டும், குழியுமாக உள்ள சாலையை புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.சின்னப்பள்ளிவாசல் அருகில் உள்ள OHT (தண்ணீர் டேங்க்) பராமரிப்பு பணி செய்ய வேண்டும், அவுலியா நகரில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும்  உட்பட கிராம வளர்ச்சி, பிரச்சனைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments