'பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் திருச்சியிலிருந்து இயக்குவது குறித்து பரிந்துரை'


பல்லவன் விரைவு ரயில் முன்பு போல மீண்டும் திருச்சியிலிருந்து இயக்குவது குறித்து  ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட ரயில் பயணிகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் தூய்மை,  பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் கருத்துக்களை பெற்று ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்வது ரயில்பயணிகள் பாதுகாப்பு குழுவின் நோக்கமாகும். 

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய ரயில் நிலையங்களில், ரயில் பயணிகள் பாதுகாப்பு குழு கடந்த சில நாள்களாக  ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில் ரயில் நிலையத்தின் நடைமேடைகள், கழிப்பறைகள், காத்திருப்பு அறை, உணவகங்கள் உளளிட்ட பல்வேறு  இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதே போல ரயில் நிலையத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா, நிறை குறைகள் என்ன என்பது குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தனர். 

அதனைத் தொடர்ந்து,  ரயில் பயணிகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஜெயிந்தி லால் ஜெயின், மோகன் லால் கிஹாரா ஆகியோர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், 
தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான நடவடிக்கைகளால் ரயில்வே நிர்வாகம் மேம்பட்டு வருகிறது, பயணிகளின் கருத்துக்களும் இதனையே பிரதிபலிக்கின்றன என்றனர்.

தற்போது காரைக்குடியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில், முன்பிருந்தது போல மீண்டும் திருச்சியிலிருந்து இயக்கப்படுமா? என்கிற கேள்விக்கு பதிலளிக்கையில், இதே கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வந்துள்ளது. இதன் கருத்துருக்களை ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வைப்போம்,

அதே போல திருச்சி முதல் தஞ்சை பயணிகள் ரயில் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ. 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை குறைக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து உரிய தீர்வு எட்டப்படும் என்றார். திருச்சி ரயில் நிலையம் சுத்தமாக இருந்ததற்காக ரயில் நிலையத்திற்கு இந்த குழுவினர் ரூ 10,000 வெகுமதியாக வழங்கினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments