"முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கனவு திட்டம்" 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நாகை-திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?

11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நாகை-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

"கருணாநிதியின் கனவு திட்டம்" நாகை மாவட்டம் திருக்குவளையை மேம்படுத்துவதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். அதன்படி நாகையில் இருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு ரெயில் விட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். இதை தொடர்ந்து கருணாநிதியின் கனவு திட்டமான நாகை-திருத்துறைப்பூண்டி இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு நாகை-திருத்துறைப்பூண்டி இடையே அகல ரெயில்பாதை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. 

11 பெரிய பாலங்கள்

நாகை பாபாக்கோவில், திருக்குவளை, பாலகுறிச்சி, செம்பியன்மகாதேவி வழியாக திருத்துறைப்பூண்டிக்கு 33.50 கிலோ மீட்டருக்கு ரெயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த புதிய அகல ரெயில்பாதையில் 11 பெரிய பாலங்கள், 74 சிறிய பாலங்கள், 32 ரெயில்வே கிராசிங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு எட்டுக்குடி, திருக்குவளை, செம்பியன்மகாதேவி போன்ற சில இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது. 

அகல ரெயில் பாதை பணி கிடப்பில் போடப்பட்டது 

2011-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த அகல ரெயில்பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க நாகை பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமான நாகை-திருத்துறைப்பூண்டி ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தை தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க.அரசு கையில் எடுத்து விரைந்து முடிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 

விரைந்து முடிக்க வேண்டும் 

11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நாகை- திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments