மாவட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்
அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை புதுக்கோட்டை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை வருகையினையொட்டி, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகை தர உள்ளார். அதை முன்னிட்டு கண்காட்சி அரங்குகள் மற்றும் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அதிகளவிலான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கும் வகையில் அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், விழா நாளன்று பயனாளிகளை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவது குறித்தும், விழா நடைபெறும் இடத்திற்கு தடையற்ற மின்சார வசதி ஏற்படுத்துதல், குடிநீர் வசதி மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அனைத்துத் துறை அலுவலர்களும் முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் விழாவினை சிறப்பாக நடத்திட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் ரம்யாதேவி (காவேரி-வைகை-குண்டாறு), சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments