முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருகை: மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஐ.ஜி. ஆய்வு    
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருவதையொட்டி விழா நடைபெற உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தினை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) புதுக்கோட்டைக்கு வருகை தருகிறார். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழா பந்தல் அமைப்பு, பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.

ஆலோசனை

அதன்பின்னர் அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்த நிலையில் மைதானத்தில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் சேறும், சகதியுமானது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மேலும் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஐ.ஜி. ஆய்வு

மேலும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெறும் பகுதியில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் கவிதா ராமுவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments