நிதிச்சுமை சரியானவுடன் உள்ளாட்சிகளின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் -அமைச்சா் கே.என். நேரு

        புதுக்கோட்டையில் உள்ள ராஜா ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. தமிழ்நாடு அரசின் நிதிச்சுமை சரியானவுடன் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா் மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த கடைசி மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாள்கள் புதுக்கோட்டையில் நடத்தப்படுகிறது.

விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழக நகராட்சி நிா்வாகத் துறை


அமைச்சா் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, புதுகை ஆட்சியா் கவிதா ராமு, மன்னா் வாரிசான ராஜா ராஜகோபால தொண்டைமான், திருச்சி முன்னாள் மேயா் சாருபாலா ஆா். தொண்டைமான், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, நூற்றாண்டு விழாக் குழுச் செயலா் ரா. சம்பத்குமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் கே.என். நேரு செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த பத்தாண்டுகளாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு தமிழக முதல்வா், கலைஞா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ரூ. 1,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தாா். இந்த ஆண்டும் ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். இதுமட்டுமல்லாமல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். இதைக் கொண்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அவசரப் பணிகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழக அரசு மிகப் பெரிய நிதிச்சுமையில் உள்ளது. அதனால், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. நிதி சுமை சீரானதும் அதுபற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளா்கள் நிரப்பப்படுவா். இதனிடையே, தேவையான இடங்களில் பொறியாளா் பணியிடங்களை நிரப்ப கருத்துரு கோரப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

புதுக்கோட்டையில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு தற்காலிகத் தீா்வு காணும் வகையில், 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை நகரின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், ரூ. 690 கோடி மதிப்பீட்டில் காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீா்வு காணப்படும் என்றாா் நேரு.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments