திருச்சியில் இருந்து பல்லவன் ரயிலை இயக்க வாய்ப்பில்லை - ரயில்வே மேலாளர் திட்டவட்டம்






திருச்சி ரயில் நிலையத்திலிருந்து பல்லவன் ரயிலை இயக்க வாய்ப்பில்லை என்று திருச்சி ரயில்வே வணிக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

கொரானா காலக்கட்டத்திற்கு பிறகு திருச்சி ரயில்வே கோட்டத்தின் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக  திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் என்றுள்ளார். அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்த ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, ரயில் தண்டவாள விரிசல், தண்டவாள விலகல், ஜல்லி குவியலில் கோளாறு போன்ற பிரச்னைகளை கண்டறியும், அதிநவீன கண்டுபிடிப்புகளை கண்டிபிடிக்கும் தொழில் முனைவோர்கள் 'ஸ்டார்ட் அப்' என்ற திட்டத்தின் கீழ் வரவேற்கப்படுகின்றனர்.  ரயில்வே பாதுகாப்பு தொடர்பான, 11 வகையான தலைப்புகளில், இந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தலா 1.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே கோட்டம், கடந்த, 2021ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில், ரூ.115 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் - மே மாதங்களில், ரூ.229 கோடி என வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும், 2021ம் ஆண்டு ரூ.19.64 கோடி வருவாய் இருந்தது. நடப்பாண்டு, ரூ.68.12 கோடி என வருவாய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

திருச்சி ரயில்வே கோட்ட பகுதியில் மீட்டர்கேஜ் இருப்புப்பாதை திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி பகுதியில் 7 கிலோமீட்டர் மட்டுமே அகற்றப்பட வேண்டி உள்ளது. வேறு எங்கும் மீட்டர் கேஜ் பாதைகள் இல்லை. ஆகஸ்ட் மாதத்தில் இந்த 37 கிலோ மீட்டர் அகல ரயில் பாதையாக மாற்றப்படும்.

திருச்சி - விழுப்புரம் இரட்டை ரயில் பாதைப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து விட்டன. விழுப்புரம் - தஞ்சை, விழுப்புரம் - நாகை ஆகிய இரட்டை ரயில் பாதைப் பணிகள் விரைவில் துவங்க உள்ளன" என்றார்.

பல்லவன் எக்ஸ்பிரஸ்

திருச்சியில் இருந்து இயக்கப்பட்ட பல்லவன் விரைவு ரயில், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தன்னுடைய 'பவரை' பயன்படுத்தி காரைக்குடிக்கு மாற்றினார் மீண்டும் பல்லவனை திருச்சியில் இருந்து இயக்க வேண்டும்' என்று திருச்சியை சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, "திருச்சியில் இருந்து பல்லவன் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்று எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை. எனவே, திருச்சியில் இருந்து பல்லவன் விரைவு ரயிலை இயக்க வாய்ப்பில்லை" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments