அறந்தாங்கி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக நகராட்சியாகவும், மக்கள்அதிகம் கூடும் இடமாகவும் இருப்பது அறந்தாங்கி. இது பேரூராட்சியாக இருந்தபோது, 1971-ல் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கிருந்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

பின்னர், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அறந்தாங்கியில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சிதம்பரம், திருச்செந்தூர், திருப்பதி, ஈரோடு, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு அதிக எண்ணிக்கையில் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப இந்த பேருந்து நிலையம் மேம்படுத்தப்படவில்லை.

இதனால், நாள்தோறும் கடும் நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். நடைபாதையிலும் கடை விரித்து கடைகாரர்களின் ஆக்கிரமிப்பதால், இங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இங்கு கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் போன்றவசதிகள் இல்லை. இதனால், இங்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள தஞ்சாவூர் சத்திரத்துக்குச் சொந்தமான இடத்தை கையகப்படுத்தி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியது:

அறந்தாங்கி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கி அறந்தாங்கியில் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. தவிர, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார துணை இயக்குநர், மின்வாரிய செயற்பொறியாளர் போன்ற பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும், இவ்வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

இதனால், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் எந்நேரமும் மக்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால், பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதால், இங்கு எந்த வசதியையும் ஏற்படுத்த முடியவில்லை. பயணிகள் அமர்வதற்குகூட வழி இல்லாததால் அங்காங்கே உள்ள சிமென்ட் கட்டைகளில், குழந்தைகளோடு தாய்மார்களும் அமர வேண்டியுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை.

பொதுக்கழிப்பிடமும் முறையாக இல்லாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுக்கழிப்பிடம் அருகே பேருந்துகளை நிறுத்துவதால், துர்நாற்றத்தால் பேருந்தில் அமரும் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, அவசர, அவசியம் கருதி அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும்என்றார்.

இது குறித்து அறந்தாங்கி நகராட்சி ஆணையர் தோ.லீனா சைமன் கூறியது:

அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நகரில் போதுமான இடம் இல்லாததால் விரிவாக்கப் பணியை உடனே மேற்கொள்ள முடியவில்லை.

மேலும், பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள சத்திர நிர்வாகம் தானே முன்வந்து இடத்தை கொடுத்தால் விரிவாக்கப் பணியை மேற்கொள்ள வசதியாக இருக்கும். அதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளோம்.

புறநகரில் பேருந்து நிலையம் அமைப்பதை மக்கள் விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் விரைவில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றார்.

நன்றி: தி ஹிந்து தமிழ்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments