காரைக்காலை புறக்கணிக்கிறதா தெற்கு ரயில்வே? - ரயில் பயணிகள், பொதுமக்கள் வேதனை


காரைக்கால்: கரோனா பரவல் சூழலால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்காமல் தெற்கு ரயில்வே நிர்வாகம் காரைக்காலை புறக்கணிப்பதாக ரயில் பயணிகள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரோனா பரவல் சூழலால், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, கரோனா பரவல் குறைந்து, இயல்பு நிலை திரும்பியதும், பெரும்பாலான பகுதிகளில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

ஆனால், காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற முக்கிய ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் காரைக்கால், திருநள்ளாறு, நாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரக்கூடிய ஆன்மிகப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், முக்கிய ரயில்கள் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, வர்த்தக ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதுதவிர, அன்றாடம் பணிக்கு செல்வோர் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால், நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ரயில் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக்குழு பொதுச் செயலாளரும், காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்க செயலாளருமான ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு கூறியதாவது: கிழக்கு டெல்டா பகுதிகளிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவையே கிடையாது.

திருச்சி- காரைக்கால் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில், காரைக்கால்- பெங்களூரு விரைவு ரயில்,திருச்சி- காரைக்கால்- வேளாங்கண்ணி இடையேஇயக்கப்பட்ட டெமோ ரயில் ஆகிய 3 முக்கிய ரயில்களும் கரோனா பரவல் சூழலால் நிறுத்தப்பட்டன. ஆனால், இயல்புநிலை திரும்பிய பிறகு பலமுறை கோரிக்கை விடுத்தும்கூட இதுவரை அந்த ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை.

மற்ற பகுதிகளில் கரோனா சூழலால் நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படுவதுடன், கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம் புதுச்சேரியின் முக்கிய பிராந்தியமான காரைக்காலை மட்டுமின்றி, கிழக்கு டெல்டா பகுதிகளையே புறக்கணிக்கிறது என்று கூறலாம்.

இப்பகுதியில் காரைக்கால் அம்மையார் கோயில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம் என பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள் இப்பகுதியில் உள்ளதால், நாடு முழுவதிலுமிருந்தும் ஏராளமான ஆன்மிகப் பயணிகள் வந்துசெல்ல, ரயில் போக்குவரத்து மிக அவசியம்.

அண்மையில் நாகை, திருவாரூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் உள்ள தனியார் துறைமுகத்துக்கு வந்தபோதிலும், அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள காரைக்கால் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்யவில்லை. காரைக்கால்- பேரளம் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும்கூட, காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்யாதது ஏமாற்றத்தை அளித்தது.

எனவே, இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி காரைக்கால், நாகை மாவட்டங்களில் உள்ள ஒருமித்தக் கருத்துடைய அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments