'மீண்டும் ராமேஸ்வரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை'- தெற்கு ரயில்வே அறிவிப்பு!






ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்படவுள்ளது. 

கரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வரும் ஜூன் 27- ஆம் தேதி அன்று ரயில் சேவைத் தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த ரயில் சேவையால், கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்துள்ள தொழில்கள் மேம்படும் என்றும் கூறப்படுகிறது.



ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - ராமேஸ்வரம் என வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில்கள் ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 27 முதலும் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 28 முதலும் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் எனக் கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுத்திய வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments