லண்டனில் இருந்து பரிசு பொருள் அனுப்புவதாக கூறி புதுக்கோட்டை வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.3½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

லண்டனில் இருந்து பரிசு பொருள் அனுப்புவதாக கூறி புதுக்கோட்டை வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.3½ லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகநூலில் பழக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி பகுதியை சேர்ந்தவர் எசக்கியேல்ராஜா (வயது 22). இவர், விவசாயம் செய்து வருகிறார். இவரது உறவினரான ஆரோக்கியதாஸ் என்பவருக்கு முகநூல் மூலம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் அவர் பழகிய நிலையில் லண்டனில் தான் இருப்பதாகவும், ரூ.34 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள் ஆரோக்கியதாசுக்கு அனுப்புவதாக கூறியிருக்கிறார். இவரும் சம்மதித்து பரிசு பொருளுக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அலுவலகத்தில் பேசுவதாக ஆரோக்கியதாசிடம் மர்மநபர் ஒருவர் பேசியிருக்கிறார். அதில் தங்களுக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதற்கு வரி கட்ட வேண்டும் என அந்த மர்மநபர் கூறியிருக்கிறார். இதனை நம்பிய ஆரோக்கியதாஸ், எசக்கியேல் ராஜாவிடம் கூறியிருக்கிறார். மேலும் அதற்கான பணத்தை செலுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

ரூ.3½ லட்சம் மோசடி

இதையடுத்து பரிசு பொருளுக்காக மர்மநபர் கூறிய எண்ணிற்கு முதல் கட்டமாக ரூ.25 ஆயிரத்தை கூகுள் பே மூலம் எசக்கியேல் ராஜா அனுப்பியிருக்கிறார். மேலும் அடுத்தடுத்து பல்வேறு தவணைகளில் மர்மநபர் பணம் கேட்டுள்ளார். இதனால் அவரும் பரிசு பொருளுக்காக நம்பி பணத்தை அனுப்பியிருக்கிறார். இவ்வாறு ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 800 வரை அனுப்பியிருக்கிறார். ஆனால் பொருளை அனுப்பியதாக தெரியவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை எசக்கியேல் ராஜா உணர்ந்தார். மேலும் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் எசக்கியேல்ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் 2 பேர் மீது இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கிகளுக்கு தகவல் தெரிவிப்பு

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அந்த முகநூல் கணக்கு போலி என்பதும், டெல்லியில் இருந்து பேசுவதாக கூறிய செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் மிசோரம் பகுதியை சேர்ந்தவருக்குரியது எனவும் தெரிந்தது.

மேலும் அவர் செலுத்திய பணத்தின் வங்கி கணக்கு எண்களை பார்த்ததில் டெல்லி, மேகாலயா, அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலத்தில் உள்ள வங்கிகள் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்தந்த வங்கிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் இ.மெயில் மூலம் தகவல் தெரிவித்து, எசக்கியேல் ராஜா செலுத்திய பணத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்தி உள்ளனர். மேலும் கணக்கு வைத்துள்ளவர்களின் முகவரி விவரங்களை போலீசார் கேட்டுள்ளனர்.

நகைகளை அடகு வைத்து...

இந்த சம்பவத்தில் ஏமாற்றப்பட்டவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் நகைகளை அடகு வைத்து அதன் மூலம் வந்த பணத்தை பரிசு பொருளை எதிர்பார்த்து செலுத்தியிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு எந்த பரிசு பொருளும் வராமல், பணம் போனது தான் மிச்சம்.

ஆன்லைனில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஒரு சிலர் இன்னும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments