வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் கலெக்டர் கவிதாராமு தகவல்





குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாமினை புதுக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் கவிதாராமு நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் தெரிவிக்கையில், ‘‘தமிழக அரசு 2023-ம் ஆண்டிற்குள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே இலக்கு ஆகும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 அதன்படி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பினைத் தடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,799 அங்கன்வாடி மையங்களும், 76 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 257 துணை சுகாதார நிலையங்களும், 13 அரசு மருத்துவமனைகளும், ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் என ஆகமொத்தம் 2,146 இடங்களில் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 

குறிப்பாக வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை இரண்டையும் தவறாமல் கொடுக்க வேண்டும். துத்தநாக மாத்திரையை 14 நாட்கள் வரை தொடர்ந்து கொடுக்கவும். மேலும் வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில், தாய்ப்பால் மற்றும் நீர் ஆகாரம் தொடர்ந்து கொடுக்கவும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சிகிச்சைக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை அணுகலாம்’’ என்றார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன், நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments