வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரவக்குறிச்சி தாசில்தார் கைது உடந்தையாக இருந்த டிரைவரும் சிக்கினார்




        வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரவக்குறிச்சி தாசில்தார் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவரும் கைதானார்.

லஞ்சம்

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக பழனிசாமி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்தநிலையில் வாரிசு சான்றிதழ் பெற அரவக்குறிச்சி தாசில்தார் ராஜசேகரன், பழனிசாமியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிசாமி இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை பழனிசாமியிடம் கொடுத்து அதனை தாசில்தார் ராஜசேகரனிடம் வழங்குமாறு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து பழனிசாமி நேற்று அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியில் இருந்த தாசில்தார் ராஜசேகரன் முன்பு இருந்த மேஜை மீது லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை வைத்தார். அந்த பணத்தை தாசில்தார் ராஜசேகரனின் கார் டிரைவர் சுரேந்தர் எடுத்து ராஜசேகரனிடம் கொடுத்தார். அதனை ராஜசேகரன் பெற்றுக் கொண்டார்.

தாசில்தார்-டிரைவர் கைது

அப்போது அங்கு மறைந்து இருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் ராஜசேகரன் மற்றும் கார் டிரைவர் சுரேந்தர் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments