சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் என்ஜினீயரிங், கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க 27-ந் தேதி வரை அவகாசம் உயர்கல்வித்துறை நீட்டித்து உத்தரவு
        சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், என்ஜினீயரிங், கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவகாசம் நீட்டிப்பு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த மாணவர்களும் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரவேண்டும் என்பதை மனதில் வைத்து, தேர்வு முடிவுகள் வெளியாகும்வரை என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும், தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் ஏற்கனவே உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து இருந்தார்.

அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நேற்று வெளியிட்டதை தொடர்ந்து, உயர்கல்வித்துறை சார்பில் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) வரை கால அவகாசத்தை நீட்டிக்க உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு

இதுவரை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 1 லட்சத்து 95 ஆயிரத்து 337 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 902 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 987 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

விண்ணப்பித்தவர்களில் முதல்கட்டமாக 2 ஆயிரத்து 442 விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகிற 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக விண்ணப்பிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுடன் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு 3 லட்சத்து 95 ஆயிரத்து 817 பேர் விண்ணப்பப் பதிவு செய்திருக்கின்றனர். அவர்களில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 535 பேர் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்திருப்பதும், அதில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 203 பேர் கட்டணங்களை செலுத்தியிருப்பதும் உயர்கல்வித் துறை தகவலில் தெரியவந்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments