தினத்தந்தி தலையங்கம் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கெடுபிடிகள் தேவையா?
பிளஸ்-2 மாணவர்கள் தாங்கள் எழுதப்போகும் இறுதி தேர்வுதான் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கான வாசல் என்பதால், ஆண்டு முழுவதும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்வு எழுதியபிறகு, விடுமுறையைக் கழிக்கும் மனமகிழ்ச்சி இல்லாமல், அன்று இரவு முதலே ‘நீட்’ தேர்வு, ஜே.இ.இ. தேர்வு உள்பட மேல்படிப்புக்கான பல போட்டி தேர்வுகளை எழுத மீண்டும் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கிறது. அப்படி ‘நீட்’ தேர்வை எழுத சென்றால், தேர்வுமைய கெடுபிடிகள், இளம்பிஞ்சுகளை அவமானப்படுத்தும் செயல்கள், மாணவர்களை வேதனைப்படுத்துகிறது.

நாங்கள்தான் பிளஸ்-2 இறுதி தேர்வில் எங்கள் திறமையை காட்டி விட்டோமே, அந்த மதிப்பெண்கள் எங்கள் கற்றல் ஆற்றலை மதிப்பீடு செய்ய போதுமே, பிறகு ஏன் இன்னொரு ‘நீட்’ தேர்வு என்ற கோரிக்கை தமிழக மாணவர்களிடையே 2017-ம் ஆண்டில் இருந்து எழுப்பப்பட, அரசுகளும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய இடைவிடாமல் கோரிக்கை விடுத்து வந்தும், மத்திய அரசாங்கம் இன்னும் செவி சாய்க்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தேர்வு மையங்களில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினர். தமிழ்நாட்டிலும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் 200-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம்.

தேர்வு எழுத 2 மணி 30 நிமிடங்களுக்கு முன்பே வரச் சொன்னார்கள். அப்படி வந்த மாணவர்களுக்கு அவமானமே காத்துகொண்டு இருந்தது. மாணவிகளை கழுத்தில் அணிந்து இருந்த செயின், கைகளில் உள்ள கடிகாரம், வளையல், காதில் அணிந்து இருந்த கம்மல், காலில் அணிந்து இருந்த கொலுசு, எல்லாவற்றுக்கும் மேலாக துப்பட்டா ஆகியவற்றை கழற்ற சொன்னார்கள். தலை முடியை விரித்துவிட்டு போகச் சொன்னார்கள். நெற்றியில் பொட்டு, குங்குமம் இருக்கக்கூடாது, காலில் ஹைஹீல்ஸ் போடக்கூடாது, ஷூ அணியக்கூடாது என்று ஒரு கிரிமினலைப் போல நடத்தினார்கள். மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. முழுக்கை சட்டை அணியக்கூடாது. கையில் காப்பு, பிரேஸ்லெட் போடக்கூடாது. கடுக்கன் அணியக்கூடாது, ஷூ போடக்கூடாது. சாதாரண செருப்புதான் அணியவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன.

இந்த சோதனையையெல்லாம் ஆசிரியர்கள் மட்டும் செய்தால் பரவாயில்லை. தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை நியமித்து இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை. அதிலும் கேரளாவில் நடந்த சம்பவம் மிகவும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அங்கு கொல்லம் அருகே உள்ள ஆயூர் என்ற ஊரில் உள்ள மார்தோமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடையில் ஹூக் இருக்கிறது என்று கூறி கழட்டி வைத்துவிட்டு போகச் சொல்லியிருக்கிறார்கள். மாணவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து தேர்வுஎழுத வேண்டிய நிலையில் இருந்த மாணவிகள் மிகுந்த கூச்சத்தோடு உடல்ரீதியான இந்த துன்பத்தை தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலோடு, எப்போதுதான் தேர்வு முடியும்? என்ற உணர்வில் சரியாக தேர்வு எழுதமுடியாமல் வந்து இருக்கிறார்கள்.

சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட வேறு எந்த நுழைவு தேர்வு, தேர்வாணையக் குழு நடத்தும் தேர்வு என்று எந்த தேர்வுகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. பிறகு ஏன் ‘நீட்’ தேர்வில் மட்டும் இந்த தேவையற்ற கட்டுப்பாடு?. வேண்டுமானால் தேர்வு மையத்தில் கூடுதல் கண்காணிப் பாளர்களை நியமித்துக்கொள்ளுங்கள், விமான நிலையத்தில் இருப்பதுபோல கேமராக்கள், ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர்களை வைத்து சோதனை செய்து கொள்ளுங்கள், போதும் இந்த அவமானம் என்று மாணவர்கள் வேதனை குரல் எழுப்புகிறார்கள். மாநில அரசுகள், மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த வேண்டாத கட்டுப்பாடுகளுக்கு ஒரு முடிவு கொண்டுவர வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments