இலுப்பூரில் பரபரப்பு: அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு





இலுப்பூர் அருகே அரசு டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டாக்டர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சஞ்சிநகரை சேர்ந்தவர் ஆசிக் அசன்முகமது. இவர் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். ஆசிக் அசன்முகமதுவின் சகோதரி ஆயிஷாபர்வீன் என்பவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக ஆசிக் அசன்முகமது குடும்பத்தோடு புதுக்கோட்டை சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை ஆசிக் அசன்முகமது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் செல்ேபான் மூலம் ஆசிக் அசன்முகமதுவிற்கு தகவல் தெரிவித்தனர்.

200 பவுன் நகைகள் கொள்ளை

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிக் அசன்முகமது வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் தீரன் ½ கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி சென்று மீண்டும் அவரது வீட்டிற்கே திரும்பி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே கொள்ளை நடந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். டாக்டர் ஆசிக் அசன்முகமது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதோடு, இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அந்த வீட்டில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் வீட்டில் இருந்து 200 பவுன் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

இதேபோல சஞ்சிநகர் பகுதியில் டாக்டர் வீட்டின் அருகே வசித்து வரும் பள்ளிவாசல் மோதினார் பீர்முகமது (45) என்பவர் வீட்டின் வெளியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போய் உள்ளது. இலுப்பூர் கண்ணாரத் தெருவில் வசித்துவரும் கூலித்தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (57) என்பவர் வீட்டில் 5 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை போய் உள்ளது. இலுப்பூர் வடுகர் தெருவில் வசித்து வரும் ஆரோக்கியதாஸ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. ஒரே நாளில் இலுப்பூரில் 4 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை நடைபெற்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments