ஜூலை-26 உலக அலையாத்தி காடுகள் தினம்: கோபாலப்பட்டிணத்தில் இருக்கும் அலையாத்தி காடுகள் பற்றி பார்ப்போம்!!






புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதியான கட்டுமாவடி தொடங்கி மீமிசல் அடுத்த ஏனாதி வரையிலான 32 கிமீ நீளம் கொண்டது. கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள பகுதிகளில்  அதிகமாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் குபா தெரு பின்புறம் தொடங்கி தோப்பு பகுதி வரை பறந்து அலையாத்தி காடுகள் உள்ளது. பார்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கும்.

பொதுவாகவே ஆழம் குறைந்த சதுப்பு நிலப்பரப்பு இங்கு காணப்படுகிறது. கோபாலப்பட்டிணத்தில் அலையாத்தி மரங்களை கொண்ட அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன.

அலையாத்தி காடுகள் பற்றிய தகவல்

இயற்கை சீற்றங்களில் இருந்து காக்க கூடிய அரணாக அலையாத்திக் காடுகள் உள்ளன.

அலையாத்தி காடுகளை பொறுத்தமட்டில் எல்லா இடங்களிலும் வளர்க்க முடியாது. ஆற்றுநீர், கடல்நீர் இரண்டும் சேரும் இடங்களில் தான் அவை வளரும். சுனாமி ஏற்பட்ட போது அலையாத்தி காடுகள் உள்ள பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

இவை பொதுவாக கடலோர பகுதிகளில் காணப்படுவதுடன், இவை இருக்கும் இடங்களில், அலை அதிகமான கடல்நீரானது மரங்களினிடையே சென்று, அலைகள் குறையப்பெற்று, மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர்நிலையாக இருப்பதனால் இவை அலையாத்தி காடுகள் எனவும் அழைக்கப்படும். அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள்  எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். 

இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு  எனப்படும். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும்.

அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மாங்குரோவ் காடுகள் என்றும் கூறப்படுகிறது. இத் தாவரங்கள் செறிந்து வளர்ந் திருக்கும் இடத்தில் நீரானது மரங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், அதாவது வெள்ளம் நிறைந்திருக்கும் இடம்போன்று தோற்றம் தருவதனால், வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு. அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 80 வேறுபட்ட இனங்கள் இருப்பதுடன் இவை ஆக்சிஜன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டிருப்பதாகவும், நிலநடுக் கோட்டுக்கு அண்மையாக இருக்கும், வெப்ப மண்டலம், அயன அயல் மண்டலம் பகுதிகளிலேயே வளரும் என்றும் அறியப்படுகின்றது. மிகவும் கடினமான, சூழலை தாங்கும் தன்மை கொண்ட ஒரு சில இனங்கள் மட்டுமே மிதவெப்ப மண்டலத்தில் வாழும் தன்மை கொண்டிருக்கின்றன.

இவற்றில் சிறிய செடிவகைகள் முதல், கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்களான 60 மீட்டர் உயரம் வரை வளரும் மரங்கள் வரை அடங்கும். இத்தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில், கடல் அலையினால் ஏற்படக் கூடிய மண்ணரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கடற்கரை பகுதிகளை பாதுகாக்கும் இயற்கை உயிர் அரண்களாக அலையாத்திக் காடுகள் விளங்குகின்றன. இவை புயல், ராட்சத அலை, பருவகால மாற்றம், அலை உயர்வு செயல்கள் மற்றும் கடல் அரிப்பு போன்ற கடற்கரை தீமைகளின் போது வேகத்தடைகளாக சேவை புரிந்து கடற்கரையில் உள்ள பகுதிகளை பாது காக்கின்றன. மீன், இறால், நண்டு மற்றும் நத்தைகள் இனப்பெருக்கம் செய்யும் உற்பத்தி தளமாகவும் அலையாத்திக் காடுகள் விளங்குகின்றன.

பல்வேறு வகையான உயிரினங்கள் பல்லுயிர் பெருக்கம் செய்யவும், இடம்பெறச் செய்யவும் ஏதுவான பகுதியாக அலையாத்தி காடுகள் இருக்கின்றன. உயிரினங்களுக்கு உணவு வளையமாகவும் இவை விளங்குகின்றன. காற்றில் கலந்துள்ள நச்சுகளை போக்கி, தூய்மையான காற்றையும் அலையாத்தி காடுகள்  வழங்குகின்றன.

இயற்கை சூழலுக்கும், மனித சமூகத்துக்கும் மிகப்பெரிய அளவில் பயன்தரும் அலையாத்திக் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சி என்ற பெயரிலும், நடைபாதை வழித்தடங்களுக்காகவும், வெளித்துறைமுக விரிவாக்க திட்டங்களுக்காகவும்,  அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.





















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments