கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே அரிசிகாடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 40). இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி 20 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த போது கீழே தள்ளிவிட்டு, கற்பழிக்க முயன்றார். இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பெண்ணை கற்பழிக்க முயன்ற சசிக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், பெண்ணை இழிவுப்படுத்தியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் ரூ.30 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்.

சிறையில் அடைப்பு

இதைத்தொடா்ந்து அவருக்கு மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து சசிக்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

தண்டனை பெற்ற சசிக்குமார் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கில் அவர் கைதாகி ஜாமீனில் வந்த போது தான் பெண்ணை கற்பழிக்க முயன்றிருக்கிறார். இதில் கைதான அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போக்சோ வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை மகிளா கோர்ட்டில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கிலும் அவர் தற்போது சிறை தண்டனை அனுபவிக்கிறார். தற்போது 2-வது வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments