திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் என்ஜின் தடம் புரண்டது


திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையம் அருகே சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரெயில் என்ஜின் தடம் புரண்டது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ெரயில் நிலையம் உள்ளது. தற்போது திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து அதில் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் பகுதிக்கு ஜல்லி ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் என்ஜின் திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதனால் ரெயில் அந்த பகுதியில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூர் செல்லும் பாதையில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் கூட எதிர் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ெரயில் மீது ஏறி மாற்றுப் பகுதியில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திருத்துறைப்பூண்டி போலீசார் வாகனங்களை பழைய பஸ் நிலையம் பகுதியில் மறித்து திருத்துறைப்பூண்டி மணலி, குறும்பல், வழியாக விளக்குடி கடை தெருவில் ஏறி மன்னார்குடி செல்லும் வகையில் திருப்பி விட்டனர்.இதேபோல மன்னார்குடியில் இருந்து வந்த வாகனங்களை திருத்துறைப்பூண்டி போலீஸ் காலனி வழியாக விட்டுகட்டி, வரம்பியம் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருத்துறைப்பூண்டியில் நேற்று இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மீட்பு பணி

ரெயில் தடம் புரண்டது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு விரைந்து வந்தனர். கூடுதல் பொறியாளர் சோமசுந்தரம் தலைமையில் சுமார் 50 ஊழியர்கள் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் திருவாரூரில் இருந்து மாற்று ரெயில் என்ஜின் கொண்டு வரப்பட்டு பின்புறமாக நின்ற ரெயில் பெட்டிகள் பட்டுக்கோட்டை நோக்கி இழுத்து நிறுத்தி வைத்தனர். இதனைத்தொடர்ந்து இரவு 10 மணி அளவில் அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. தடம் புரண்ட என்ஜினை மீ்ட்கும் பணி இரவு முழுவதும் நடந்தது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments