ஆலங்குடியில், குறித்த நேரத்தில் பஸ் வராததால் மாணவர்கள் 7 கி.மீ. தூரம் வீட்டிற்கு நடந்து சென்ற அவலம்
ஆலங்குடியில் குறித்த நேரத்தில் பஸ் வராததால் மாணவர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வீட்டிற்கு நடந்து சென்ற அவல நிலை ஏற்பட்டது.

பள்ளி மாணவர்கள்

ஆலங்குடியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் நாள்தோறும் காலை பள்ளிக்கு வந்து மீண்டும் அந்த பஸ்களிலேயே மாலை ஊருக்கு திரும்பி வந்தனர்.

இந்நிலையில் ஆலங்குடியில் இருந்து நம்பம்பட்டி, மாங்கோட்டை, செம்பட்டி விடுதி வழியாக கறம்பக்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ் கடந்த சில மாதங்களாக மாலை மற்றும் காலை வேளைகளில் குறித்த நேரத்துக்கு இயக்கப்படவில்லை. மேலும் பஸ் வசதியின்றி கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வந்தனர்.

7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற அவலம்

இந்நிலையில் நேற்றும் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 8-ம் நம்பர் எண் கொண்ட நகர பஸ் வழக்கமாக இயக்கப்படும் நேரத்தை விட 10 நிமிடம் முன்கூட்டியே ஆலங்குடியில் இருந்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி முடித்து வந்த மாணவ-மாணவிகள் பஸ் சென்று விட்டதாலும், வேறு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இல்லாத காரணத்தாலும் 7 கிலோ மீட்டர் தூரம் நம்பம்பட்டி, மாங்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு நடந்தே வீட்டிற்கு சென்ற அவல நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், மாணவர்களின் வசதிக்காக அந்த வழிதடத்தில் பஸ் இயக்க நீண்ட காலத்திற்கு பின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் அதே பஸ் டிரைவர், கண்டக்டர் அதிக கூட்டம் சேருவதாக கூறி குறித்த நேரத்திற்கு பஸ் இயக்காமல் முன்கூட்டியே எடுத்து சென்று விடுவது வேதனை அளிப்பதாக கூறினர். மேலும் குறித்த நேரத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments